பாண்டவர்களின் தாய் குந்திதேவி வழிபட்ட குந்தேஸ்வர் மகாதேவ் கோயில்
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ளது குந்தேஸ்வர் மகாதேவ் கோயில். பாண்டவர்களின் தாய் குந்திதேவி வழிபட்ட இத்தலத்திற்கு வந்தால் வெற்றி நிச்சயம்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடப்பது உறுதியானது. உடனே பாண்டவர்களின் தாய் குந்திதேவி சிவபூஜை செய்தாள். ஒருநாள் அவளது கனவில் தோன்றிய சிவன், "தங்க மலர்களால் என்னை பூஜை செய். வெற்றி நிச்சயம்'' என்றார். உடனே தன் மகன் அர்ஜூனனிடம், 'தங்க மலர்கள் பூக்கும் மரத்தை கொண்டு வா" என கட்டளையிட்டாள். அவனும் கிருஷ்ணரிடம் சொல்லவே, "தங்க மலர் என்பது பாரிஜாத மலரைக் குறிக்கும்.
பாற்கடலில் இருந்து தோன்றிய இந்த மரம், தற்போது இந்திரலோகத்தில் உள்ளது. அவரை வேண்டினால் மரம் கிடைக்கும். அதை சிவலிங்கத்திற்கு அருகிலேயே நட்டு விடு" என ஆலோசனை கூறினார். அர்ஜூனனும் தவம் செய்து அந்த தெய்வீக மரத்தை பெற்றான். அம்மரத்தின் சிறப்பே அதன் மலர்கள்தான். மரத்தில் இருக்கும் வரை வெள்ளை நிறமாக இருக்கும். பறித்தவுடன் தங்க நிறத்திற்கு மாறி விடும். அந்த மரத்தை மண்ணில் நட்டவுடன் உடனே வளர்ந்து பூ பூத்தது. மகிழ்ந்த குந்திதேவியும் அன்று முதல் சிவபூஜை செய்தாள். பாண்டவர்களும் போரில் வெற்றி பெற்றனர். குந்திதேவி வழிபட்டதால் சுவாமி 'குந்தேஸ்வரர்' என பெயர் பெற்றார்.
தற்போதும் இந்த பாரிஜாத மரம்கோயிலுக்கு வெளியே உள்ளது. இங்குள்ள பாரிஜாத மரத்தின் வயது 5000 ஆண்டுகள். குந்தி தேவி இறந்த போது அவரை எரித்த சாம்பல் இம்மரத்தைச் சுற்றியே ாவியதால் தான் மரம் செழித்து வளர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். கோயிலுக்கு சற்று முன்பு அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. அதை தாண்டிச் சென்றால் வீடு மாதிரி முகப்பும், அகலமான துாண்களையும் காணலாம். அதுவே கோயிலின் முன்தோற்றம்.
கருவறையில் சிவன் செவ்வக வடிவில் காட்சி தருகிறார். இரண்டு அடி உயரத்தில் தலையில் குல்லா அணிந்தது போல நடுவில் லிங்க வடிவம் வித்தியாசமாக உள்ளது.
கருவறை மீது வடஇந்திய பாணியில் கோபுரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் துர்கா தனி சன்னதியில் அருள்புரிகிறாள். கணேஷ் சன்னதியும் உள்ளது.
0
Leave a Reply